Sunday, May 17, 2009

விரிவடையும் நகரமும், பாழாய் போன மனித மனமும்!!

நகரம் விரிவடைவதை நினைத்தால் என் மனம் வருந்தாமல் இருக்க முடிவதில்லை. என் மாமா சொல்லியிருக்கிறார், இந்த மகாபலிபுரம் சாலை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததென்று. இன்றும் கூட, இந்த சாலையில் செல்லும்போது ஒரு வித மனக்கிளர்ச்சி உண்டாகும், ஆயிரம் வருடங்களுக்கு முன் இதே சாலை தான், நரசிம்மபல்லவன் தன் புரவியில் புழுதி கிளம்ப சென்ற ராஜபாட்டையாக இருக்கக் கூடுமென்று. ஆனால் இப்போது கிளம்பும் புழுதி வேறு. எங்கு பார்த்தாலும் கைது குலுங்கும் மாமரங்களும், பனைமரங்களும், தென்னை மரங்களும் இருந்தனவாம். என் மனம் இருப்பு கொள்ளவில்லை. இப்பொழுது இங்கு இல்லாமல் போன மரங்களுக்கும், பறவைகளுக்கும் மனம் ஏங்கி தவிக்கிறது. அந்த மரங்களில் கடைசியாக பறிக்கப்பட்ட கனிகளுக்கு தெரியுமா,தாங்கள் தான் தன் தாயின் கடைசி பிள்ளைகள் என்று? அம்மரங்களை வித்திட்ட மனிதனக்கு எப்படிப்பட்ட மனநிலை இருந்திருக்கும், அந்த ஜீவன்களின் நெடிது உயர்ந்த, கிளை பரப்பிய அந்த ஜீவன்கள் பூமி நோக்கி விழும்போது? பணம் மனத்தை வெல்கின்ற தருணம் இது. இன்று காலை பேருந்தில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கோடை வெய்யில் தகித்து கொண்டிருந்தது. தண்ணீருக்காக வரிசையாக வைக்கப்பட்ட குடங்கள் உருகிகொண்டிருப்பது போல் ஒரு பிரமை. மழை நாளில் காளான்கள் முளைப்பது போல, சாலையில் இருபுறம் கண்ணுக்கு தெரிகின்ற தூரம் வரை கட்டிடங்கள் முளைத்து வருகின்றன. காளான்கள் போல சில நாட்களில் காய்ந்து மண்ணோடு ஒன்றி விடுவதில்லை இவைகள். ஏதேதோ நினைவுகள் கிளம்ப பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி என்னை மிகவும் வருந்த செய்து விட்டது. காடு போல நன்கு அடர்த்தியாக, பலவகைப்பட்ட மரங்கள் காற்றில் அசைந்து தன் இருப்பை காட்டி கொண்டிருந்தன. ஆனால் அவ்விடத்தை சுற்றி இரும்பு தகரங்களால் ஆனா வேலி போடப்பட்டு, அதன் மேல் ஒரு போர்டு காணப்பட்டது. அதில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது, ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு சொந்தமானதென்றும், இவ்விடத்தில் இன்னும் சில மாதங்களில் கட்டிடங்கள் முடிக்கபட்டு விடும் என்றும்.. அந்த மரங்களிடம் நிறைய பேச வேண்டும் போல இருந்தது. 'உங்கள் கடைசி காலம் நெருங்கி விட்டது மக்களே, உங்களை தாங்கி கொண்டிருக்கும் இந்த பூமிக்காக மட்டும் பூத்து குலுங்குங்கள். அடுத்து உங்களுக்கு ஒரு பிறப்பிருந்தால், மனிதபபதறுகள் இல்லாத ஒரு தீவில் பிறந்து விடுங்கள்' என்று. வழியில், மாமரங்கள் இருந்த இடத்திற்கு அருகில் ஏதோ கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அவ்விடம் முழுக்க ஒரே சிமெண்டு புழுதியாக இருந்தது. அந்த மரங்களின் ஒரு பக்கம் தன்னுடைய பச்சு நிறத்தையும், அந்த பக்கம் சிமிண்டு புழுதி அப்பிய இலைகளுடன் கருநீலம் கலந்த வெள்ளை நிறத்திலும் காணப்பட்டது. சற்று தொலைவில் சில பனைமரங்கள், இனி வாழ்ந்து என்ன பயன் என்பது போல் நின்று கொண்டிருபதாக பட்டது. ஒரு பனைமரத்தின் மட்டைகள் காய்ந்து, தன் இடத்திலிருந்து பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது போல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகளும், மைனாக்களும் பறந்து கொண்டிருக்க வேண்டிய இடத்தில், சான்ட்ட்ரோவும், சுசுகியும் சாலையில் பறந்து கொண்டிருக்கிறது. ஆம். கடைசியாக சிட்டுக்குருவிகள் கிரீச்சிட்டு எப்போது கேட்டிருப்பீர்கள்? எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இல்லை. ஒரே கிளையில் வரிசையாக, சில முன்பக்கமும், சில பின்பக்கமும், மாறி மாறி உட்கார்ந்து கொண்டு அவை கிரீச்சிடும் போதும், ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு ஒன்றாக பறந்து செல்லும் காட்சிகளை காண்பதற்கு இந்த நகர வாழக்கையில் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இனி அந்த சந்தர்ப்பம் வாய்க்குமா? என் சிறு வயதில் என் வீடு மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகளை என் சிறு கைகளால் ஏந்தி பார்த்த அனுபவம் என் கண் முன்னே விரிந்தது. வண்ணங்களின் மேல் பிரியம் கொண்ட நான், சில மாலை நேரங்களில் வரைவதற்கு மொட்டை மாடி சென்று விடுவேன். அன்றும் அப்படித்தான், மாடியில் உட்கார்ந்துகொண்டு வரைந்து கொண்டிருந்தேன். நிறைய சிட்டுக்குருவிகள் பக்கத்தில் உள்ள கொடுக்காபுளி மரத்தில் உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தன. என் நண்பன் ஒருவன் அந்த குருவிகளில் ஒன்றை அதற்கு வலிக்காமல் பிடித்து கொடுத்தான். என் சிறு கைகளில், அது ஒரு சிலநொடிகள் இருந்தது. பின்பு மறுபடியும் தன் இடத்திற்கு சென்றது, என் கைகளில் இருந்து சிறகசைத்து பறந்த அந்த கணத்தில் என் உள்ளங்கைகளில் ஏற்பட்ட காற்றின் தடயம் இன்னும் இருக்கிறதா என என் கைகளை மூடி திறந்து என் முகத்தின் அருகில் வைத்து பார்த்தேன். அந்த நேரத்தில் ஏற்பட்ட மனஎழுச்சி எனக்குள் ஆழ்த்த தாக்கத்தை உருவாக்கியது. அந்த நிகழ்வுக்கு பின் நான் மிக அழகாக ஒரு இயற்கை காட்சியை வரைந்திருந்தேன். இப்பொழுது உணர்கிறேன்,நாம் கடந்து வந்த காலத்தில், வாழ்க்கையில் மிகவும் சாதாரணம் என கடந்து போகும் தருணங்கள், இன்று நினைத்து பார்க்கும்போது எவ்வளவு மகத்துவம் பெறுகிறது என்றும், அவை வாழ்வின் முக்கியமான நிகழ்வாகவும் அமைகிறது என்றும். ஏரிகள் கூனி குறுகி குளம் போல் காட்சி அளிக்கிறது. அடுக்குமாடி கட்டங்களில் நிரந்தர வருகையால், நாரைகளின் வருகைகள் நின்று போய்விட்டன. நான் இறங்கும் இடம் வந்தது. ஒரு சிறுவன் கொஞ்சம் மாங்காய்களும், கொஞ்சம் முந்திரி பழங்களும் விற்பதற்கு உட்கார்ந்திருந்தான். மாங்காய்களின் ஓரத்தில் அதன் பால் வடிந்து கொண்டிருந்தது. இப்போது தான் எடுத்து வந்திருப்பான் போல. முந்திரி பழங்கள் முழுவதும் மஞ்சள் நிறத்தில், முழு வெயிலையும் அதன் நிறத்தில் வாங்கி கொண்டது போல் இருந்தன. இவன் பள்ளி விடுமுறை என்ற காரணத்தினால் மட்டும் தான் இங்கு விற்று கொண்டிருக்கிறான், அடுத்த மாதம் பள்ளி சென்று விடுவான் என்ற ஆறுதலுடன்,நடந்து கொண்டிருந்தேன். வடஇந்திய இளைஞர்கள் சிலர் கட்டிட வேலைக்காக கம்பிகளை முறுக்கி கொண்டிருந்தனர். அந்த கம்பிகளை பார்க்கும் போது அதன் மேல் காரணமற்ற கோபம் ஏற்பட்டது. அலுவலகத்தை அடைந்து விட்டேன். திடீரென்று காரணம் இல்லாமல் என் மேல் கோபம் வந்தது. நகர வாழ்வின் சுழல்காற்றில் இம்மரங்களின் மரணத்திற்கு நானும் ஒரு காரணமோ என்று. முகம் கழுவ சென்றேன். என் முகத்தை கண்ணாடியில் பார்க்காமல், என்னுடைய இடத்திற்கு வந்து விட்டேன். ஒரு காட்சி என் மனதில் வந்தது, அலுவலகத்துக்குள் நுழையும் போது பார்த்த அழகுக்காக நடப்பட்ட செடிகளின் பூக்களும் மரங்களும். எந்த சலனமும் இல்லாமல் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஆம். நகரம் விரிவடைவதை நினைத்தால் என் மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை